Header Ads

  • சற்று முன்



    2-ஆவது நாளாக ரயில் மறியல்: 17,000 பேர் கைது.

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், விழுப்புரம், கோயம்புத்தூர், திருப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (அக்.18) நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மொத்தம் 17,000 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
    18 பேரவை உறுப்பினர்கள்: தமிழகம் முழுவதும் 93 இடங்களில் தொடர்ந்து 2-ஆவது நாளாக நடைபெற்ற இந்த ரயில் மறியல் போராட்டத்தில் 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 1,100 பெண்கள் உள்பட மொத்தம் 17,000 பேர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
    வைகோ, திருமாவளவன்: சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சியினருக்கு சென்னை ராஜரத்தினம் மைதானத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையம் வரை ஊர்வலமாகச் செல்ல போலீஸார் அனுமதி அளித்திருந்தனர்.

    அதன்படி, இரண்டாம் நாள் போராட்டத்தைத் தொடங்கிய வைகோ, திருமாவளவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில்நிலையத்தின் 4-ஆவது நடைமேடை தண்டவாளத்தில் இறங்கி வாராணசி நோக்கிச் செல்லும் விரைவு ரயிலை மறித்து ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தினர். 
    திருச்சியில்... திருச்சி மாவட்டத்தில் புறநகரில் 6 இடங்களிலும், மாநகரில் 3 இடங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. லால்குடி திமுக பேரவை உறுப்பினர் சௌந்திரபாண்டியன் உள்பட 989 பேர் கைது செய்யப்பட்டனர். மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அடுப்பு வைத்து சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வைகை ரயில் மறிப்பு: புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். புள்ளம்பாடி ரயில் நிலையம் அருகே மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை சென்ற வைகை ரயில் மறிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டது.
    தஞ்சாவூரில் பயணிகள் ரயில் மறிப்பு: தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 9.40 மணியளவில் வந்த மயிலாடுதுறை- திருச்சி பயணிகள் ரயிலை நடைமேடைக்கு வரும் முன்பே திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மறித்தனர்.
    இதே ரயிலை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் தலைமையிலும், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தலைமையிலும், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் பி.கே. தெய்வசிகாமணி தலைமையிலும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
    1,964 பேர் கைது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 இடங்களில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட 1,964 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால்: திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    முத்தரசன் பங்கேற்பு: திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் பங்கேற்றார். அவருடன், மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விவசாயிகள் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
    நன்னிலம் ரயில் நிலையத்தில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன், தமாகா மாவட்டத் தலைவர் குடவாசல் தினகரன் உள்ளிட்டோரும், நீடாமங்கலத்தில் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் பி. சண்முகம், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பி. ராசமாணிக்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், சிக்கல், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி ஆகிய பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு விவசாய அமைப்பினரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.
    நாகை ஆவராணி புதுச்சேரி ரயில்வே கேட் பகுதியில் நடைபெற்ற ரயில் மறியல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி, மாலை சுமார் 6 மணி வரை நடைபெற்றது. போராட்டத்தினிடையே சிலர், ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டனர்.
    மயிலாடுதுறையில் நடைபெற்ற ரயில் மறியலில் பங்கேற்ற 45 பேரும், குத்தாலத்தில் நடைபெற்ற ரயில் மறியலில் 19 பேரும் கைது செய்யப்பட்டனர். சீர்காழியில், ரயில் இருப்புப் பாதையின் குறுக்கே அடுப்பு மூட்டி கஞ்சிக் காய்ச்சி போராட்டம் நடத்தினர்.
    காரைக்கால்: காரைக்காலில் நடைபெற்ற ரயில் மறியலில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம், காரைப் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் பி. ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    இதே போன்று விழுப்புரம், தருமபுரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ரயில் மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமையும் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad