Header Ads

  • சற்று முன்



    சசிகலா புஷ்பா, திருச்சி சிவா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தில்லி காவல் ஆணையரிடம் மனு: விமான நிலையத்தில் மோதிக்கொண்ட விவகாரம்.

    தில்லி விமான நிலையத்தில் மாநிலங்களவை திமுக எம்.பி. திருச்சி சிவாவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வாராகி என்பவர் மனு அளித்துள்ளார்.

    இது தொடர்பாக தில்லி நகர காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா பெயருக்கு அவர் எழுதியிருந்த மனுவை காவல் துறை சிறப்பு ஆணையர் தாஜ் ஹசனிடம் செவ்வாய்க்கிழமை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

    இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவராகவும் மாதமிருமுறை இதழின் ஆசிரியராகவும் நான் இருக்கிறேன்.

    கடந்த ஜூலை 30-ஆம் தேதி பிற்பகலில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் திருச்சி சிவாவை அவரது கன்னத்தில் அறைந்ததாக சசிகலா புஷ்பா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். சசிகலா புஷ்பா தன்னை கன்னத்தில் அறைந்ததை திருச்சி சிவாவும் ஒப்புக் கொண்டு ஊடகங்களில் பேட்டி அளித்தார். 

    மக்கள் பிரதிநிதிகளான இருவரும் பொது இடத்தில் இழிவான முறையில் நடந்து கொண்ட சம்பவம், விமான நிலையப் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் நடைபெற்றது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில் அச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் புகார் பதிவு செய்யவில்லை.

    விமான நிலையங்களில் இதுபோல அநாகரிகமாக நடந்து கொள்ளும் நபர்களைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பதும், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும் பாதுகாப்புப் படையினரின் கடமை. ஆனால், உயர் பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில் இரு எம்.பி.க்கள் வரம்பு மீறி மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாதது பல்வேறு சந்தேகத்தை எழுப்புகிறது.

    எனவே, இருவரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக விமான நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமிரா விடியோ காட்சியைப் பார்வையிட்டு, இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வாராகி குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறுகையில், "வாராகி மனுவின் நகல் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் விமான நிலையப் பொறுப்பு அதிகாரிக்கு தில்லி காவல் துறை அனுப்பியுள்ளது. அவரது மனுவில் குறிப்பிடப்பட்ட நாளில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விடியோ பதிவு ஏதேனும் இருந்தால் அதை காவல் துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். அதன் பிறகே வாராகியின் மனு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad